
முருகன்
பங்குனி உத்தரத்தை முன்னிட்டு சாலைகள் எங்கும் அப்பன் முருகனுக்கு அரகரோ சொல்லிய வண்ணம் பக்தர்கள் கொளுத்தும் கோடை வெய்யிலில் வெறும் காலில் காவடிகளையும், தீர்த்தங்களையும் சுமந்த வண்ணம் சாரி சாரியாக முருகனை நோக்கி செல்லுகிறார்கள். தாரை, தப்படைகள் முழங்க ஆடவரும், பெண்டிரும் சிறு குழந்தைகள் வரை கதிரவனையும் பொருட்படுத்தாது சென்ற வண்ணம் உள்ளனர்.
செல்பவர்களில் பல பிரிவுகளாக பிரிக்கலாம். தாரை, தப்படைகள் என்று இசை கருவிகள் வாசிப்பவர்கள். காவடியினை சுமந்தவாரு செல்லும் பக்தகோடிகள் ஒரு பிரிவு. இதில் கொஞ்சம் பேர் தீர்த்தக் காவடி என்பதாக குடத்தில் தீர்த்தம் எடுத்து செல்லுகிறார்கள். இவர்களுடன் இவர்களுக்கு துணைக்கு செல்லும் அவரவர் குடும்ப உறவுகளும், நட்புகளும். இதனையும் போக செல்லும் வழியெல்லாம் அன்பர்களுக்கு வயிற்று பசியாற தேவையான உணவும், ஓய்வு எடுக்கவும் தேவையான ஏற்பாடுகளில் முழ்கி விடும் காவடி குழுவின் நிர்வாகிகள். மிக முக்கியமாக பஞ்சாமிர்தம் தயாரிக்க தேவையான விருப்பாச்சி (மற்றும் தேன்வாழை)பழங்களுடன் செல்லுபவர்கள் மறக்க இயலாத மற்றொரு பிரிவினர்.
பண்டு(fund) என்ற புதிய தமிழ் சொல்லையே உருவாக்கியுள்ளார் எம் பெருமான் முருகன். வருடம் முழுமையாக மாதந்தோறும் அண்டை அயலாரும், ஊராரும் உறவினராகவும் சேர்ந்து பணம் சேர்த்து காவடி பண்டு நடத்தி தமிழர்கள் கார்த்திகேயனை தரிசிக்க வெம்மை கண்டு அஞ்சாது கிளம்புகின்றனர். தமிழர் நாகரீகத்தின் அடிப்படையிலேயே கணக்கு வழக்கில் பிரச்சினையாகி புதிய புதிய பண்டுகள் வருடந்தோறும் உருவாகி முருக பக்தியை பெருக்கி வருவது இங்கே சொல்லாது விடக் கூடாதது.
அலையென திரண்டு வரக்கூடிய பக்தர்களுக்கு தங்க இடமும், சமையல் செய்திட தேவையான வசதிகளும், கழிவிட மற்றும் குளியல் வசதியினை திறந்த வெளியிலேயே என்றாலும் தத்தம் வசதிக்கேற்ப வருடந் தோறும் செய்து தரும் குடியானவ மக்களை என்ன சொல்லி நாம் நன்றி நவில இயலும்..? அனைவரும் ஒரே சமயத்தில் கூடும் இந்த பெரு விழா சமயத்தில் பொது சுகாதாரம் என்ற விசயத்தை மட்டும் நம்மவர் சற்று பொறுப்புணர்வுடன் கடை பிடிப்பார்களேயானால் முருகன் இன்னமும் மகிழ்வான் என்பதில் ஐய்யமில்லை.
இணையவெளிக்காக இக்கட்டுரை எழுத நேர்ந்தமையால் சில வருத்தங்களையும் பதிவு செய்திடவே எண்ணம். முதலாவதாக யூடியூப் போன்ற தளங்களில் தமிழக குடிகளின் கலாச்சாரத்தின் வெளிப்பாடாக இருக்க கூடிய இந்த காவடியாட்டம் மற்றும் இசை பதிவுகள் மிக குறைவே. அப்படியும் இருக்க கூடிய ஒரு சிலவையும் ஈழத்து நண்பர்களின் முயற்சியில் விளைந்தவையாகவே இருக்க கூடும். இரண்டாவதாக சுவாமி ஐய்யப்பன் கோவிலுக்கு செல்லுதல் மற்றும் அது குறித்த விவாதங்கள் அவ்வப் போது எழுந்தாலும் ஏனோ முருகன் குறித்த விவாதங்கள் வருவதே இல்லை. நாட்டார் தெய்வங்களை கொண்டாடுபவர்களும் கண்டுகொள்வதில்லை, வைதீக ஆன்மீகவாதிகளும் அலட்சிய படுத்தி விடுகிறார்கள். பெண்களுக்கு அனுமதி மறுக்கும் சுவாமி ஐய்யப்பனுக்கு கிடைக்கும் அளவுக்கு ஊடக முக்கியதுவம் பெரும்பாலும் இளவயதுடைய ஆண்களும், பெண்களுமாக சரி சமமாக சென்று வரும் சமஉரிமை வழங்கியுள்ள முருகனுக்கு கிடைப்பதில்லை ஏனோ?
Leave a Reply