அவரை போய் நான் பார்த்து கிட்டதட்ட பதினைந்து அல்லது இருபதாண்டுகள் ஆகியிருக்க கூடும். குடும்பத்தினருடன் போய் ஒரு மாலை நேரத்தில் பார்த்தேன். அந்த கால கட்ட சிறுவயதில் அப்படியொன்றும் பெரிய பிரமிப்போ, ஆச்சர்யமோ இல்லை. இரவு நேரத்தில் மின் விளக்கு வசதி கூட ஏற்படுத்தி கொள்ளாமல் தீபஒளியிலேயே தொடர்வது குறித்து வேண்டுமானால் அன்றைக்கு வியப்பு ஏற்பட்டது இன்றும் நினைவில் இருக்கிறது.
மஞ்சு என்ற பெயருடையவர்களை வாழ்வில் ஏதேனும் ஒரு சமயத்தில் சந்தித்து இருப்போம் அல்லது இந்த பெயரினை கேள்வியாவது பட்டு இருப்போம். ஆனால் இங்கு நான் அந்த மஞ்சு என்ற பெயருக்கான மஞ்சுநாதரை பற்றி பேசுகிறேன், தமிழ்புத்தாண்டு விடுப்பில் வெளி விருந்தினர்கள் யாருமற்ற தனிமையில் அம்மாவுடன் பேசிக் கொண்டு இருந்த போது பழைய நினைவுகள் கிண்டி கிளறப் பட்டு தர்மஸ்தலா என்ற புண்ணிய பூமியினை பற்றிய பேச்சு இன்று மீண்டும் வந்து விட்டது.

தர்மஸ்தலா-மஞ்சுநாத சுவாமி கோவில்
தந்தையார் என் சிறுவயதில் அழைத்து சென்றுள்ள சுற்றுலாகளில் இரு முறை தர்மஸ்தலாவும் அழைத்து சென்று உள்ளார். அப்போதெல்லாம் அங்கு பரிமாற படும் உணவும், இலவச தங்குமிடமும் மிகப் பெரிய விசயமாக எனக்கு பட்டுள்ளது. ஆனால் இன்றைக்கு அதன் தொன்மையினையும், வரலாற்றையும் படித்த பின்புலத்தில் நோக்கும் போது கட்டாயம் போய் வர வேண்டிய இடம் என்பது புரிகிறது.

தர்மஸ்தலா

தர்மஸ்தலா கோவிலரு கே
திரு.ஜெயமோகன் தனது கட்டுரையொன்றில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்..
தர்மஸ்தலா கிமு இரண்டாம் நூற்றாண்டில் இருந்தே புகழ்பெற்றிருந்த ஒரு சமண ஸ்தலம். இது முன்பு குடுமா, மல்லார்மடி
என்ற பெயர்களில் அழைக்கப்பட்டது. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டில் கைவிடப்பட்டபின்னர் வெறும் இடிபாடுகளாக இருந்தது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் இதனருகே உள்ள பெல்தங்காடி என்ற ஊரின் ஆட்சியாளராக இருந்த பிர்மண்ண பெர்கடே என்ற சமணரைத் தேடிவந்த சமணத்துறவி இந்த ஊரைப்பற்றிச் சொல்லி இங்கே ஒரு சமண ஆலயமும், அன்னதான நிலையமும் உருவாக்கும்படி ஆணையிட்டார்.பிர்மண்ண பெர்கடேயும் அவர் மனைவி அம்மு பல்லத்தியும் இங்கே முன்னர் இருந்து பின் அழிந்த அன்னதான சாலையை மீண்டும் ஆரம்பித்தனர். பிர்மண்ண பெர்கடேயின் குடும்பம் நெல்லியாடி வீடு எனப்படுகிறது. அவர்களின் ஆட்சியில் இந்த ஊர் இருந்தது. பெர்கடே காலத்திலேயே பல உள்ளூர் தெய்வங்களும் இங்கே நிறுவப்பட்டுவிட்டன. பெர்கடே இங்கே களராகு, கலர்காயி, குமாரசாமி, கன்யாகுமரி தெய்வங்களை நிறுவி வழிபட்டுவந்தார். அந்த நாட்டார் தெய்வங்கள் பொதுவாக கர்நாடகாவில் சமணர்களாலும் வழிபடப்படுபவை.
வீரேந்திர ஹெக்டே, தர்மஸ்தலா
அவர் பிராமணர்களைப் பூஜைக்காக அழைத்தபோது அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப இங்கே சிவலிங்கம் அமைக்கப்பட்டது. இதை உள்ளூர் காவல்தெய்வமான அன்னப்பா என்ற தெய்வமே கொண்டுவந்து அறங்காவலர் ஹெக்கடேக்கு அளித்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த லிங்கம் அருகே உள்ள கதரி என்ற ஊரைச்சேர்ந்தது. பதினாறாம் நூற்றாண்டில் அன்றைய அறங்காவலர் தேவராஜ ஹெக்டே அழைப்பின் பேரில் இங்கே வந்த உடுப்பி மடாதிபதி வாதிராஜ சுவாமியால் அந்த லிங்கம் ஆலயமாக இங்கே நிறுவப்பட்டது. அதுவே மஞ்சுநாத சுவாமி கோயிலாக உள்ளது.
தர்மஸ்தலா பாகுபலி
அதாவது ஒரு சமணப் புனித தலத்தில்தான் மஞ்சுநாத சுவாமி ஆலயம் சமணர்களால் உருவாக்கப்பட்டது. அந்த சமணர்களே அதற்கு அறங்காவலர்களாகவும் இருக்கிறார்கள். பிர்மண்ண பெர்கடேயின் இன்றைய வாரிசாக வீரேந்திர ஹெக்டே இருக்கிறார். அவர் சமணர். ஆனால் சைவ வைணவக் கோயில்களுக்கும் சிறுதெய்வக் கோயில்களுக்கும் அவரே புரவலராக இருக்கிறார். எல்லா வழிபாடுகளிலும் அவர் கலந்துகொள்கிறார்.
சமணம் எப்போதுமே இந்துப் பெருந்தெய்வங்களையும் சிறுதெய்வங்களையும் தன்னகத்தே கொண்டதாகவே இருந்துள்ளது. அதையே நாம் தர்மஸ்தலாவிலும் காண்கிறோம். இன்று அங்கே வரும் கோடிக்கணக்கான எளிய இந்துக்கள் அங்குள்ள சமணக் கோயிலிலும் வணங்கிவிட்டே செல்கிறார்கள். பாகுபலிக்கும் மஞ்சுநாதருக்கும் அவர்களைப் பொறுத்தவரை வேறுபாடில்லை.
ஆம், நீங்கள் சொல்வது உண்மை. நாம் இந்து, சமண, பௌத்தப் பண்பாடுகள் ஒரே பண்பாட்டு ஊற்றுமுகத்தைச் சார்ந்தவை என்பதைப் புரிந்துகொள்ள தர்மஸ்தலாவை முக்கியமான முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டும். ஆனால் அந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியவர்கள் முதலில் இந்துத்துவம் பேசுபவர்கள்தான்.
நானும் கோவையிலிருந்து கிளம்ப தேவையான இரயில் வழித்தடம் தேடி பிடித்தேன். கோவையிலிருந்து மங்களூரு (Coimbatore Jn » Mangalore Central) வரை சென்று அங்கிருந்து சுமார் 75கிமீ தூரமே உள்ள தர்மஸ்தலாவிற்க்கு பேருந்தில் சென்று விடலாம் என்று என் அன்னையிடம் யோசனை கூறியுள்ளேன். 16627 WEST COAST EXP வண்டி இரவு 8 மணிக்கு கிளம்பி விடியற்காலை 4.35க்கு மங்களூரு சென்று சேருவதாக உள்ளது. அங்கிருந்து என்னதான் பாடாவதி பேருந்தில் மலையேறினாலும் 3 மணி நேரத்தில் காலை 8மணிக்குள் சென்றடைந்து விடலாம் என்பது என் யூகம். வரும் போதும் அடுத்த நாள் மாலை 16628 WEST COAST EXP இரவு 9.45 க்கு கிளம்பி மறுநாள் காலை 6.20க்கு கோவை வந்தடைந்து விடலாம் என்று திட்டம்.
எல்லாம் சரிதான் ஆனால் என்றைக்கு, யார் யார் பயணிக்க போகிறார்கள் என்பது அந்த மஞ்சுநாதருக்கு மட்டுமே தெரியும்.
மஞ்சுநாதர் தரிசனம் கிடைக்க நல்வாழ்த்துகள்