கடந்த வாரங்களில் எனது ஒளிப்படம் ஒன்றை மற்றொருவருக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டிய சூழல். கையில் இருப்பதை அச்சிட்டு(ப்ரிண்டு பண்ணி) அனுப்ப முயலாமல் புதியதாகவே ஒன்றை எடுத்து அனுப்பிடலாமே. ஒளிப்பட கலைஞர் கைவண்ணத்தில் நாம் மேலும் செழிப்பாக காட்சியளிப்போமே என்ற எண்ணமும் வந்தது, சரி என்று படத்தையெடுத்து அனுப்பியாச்சு. நம் கையிலும் ஒன்று இருக்கட்டுமே என்று மற்றொரு நகல் வாங்கி வந்தேன்.
அடுத்த நாள் என் உடன்பிறப்பு அந்த படத்தை எங்கே பார்க்கலாம் கொடு என்று கேட்டு வாங்கினார். அவர் வழக்கமா இப்படிதான் நிற்பதா, கொஞ்சம் சிரிச்சா என்ன என்பது போன்ற வழமையான கருத்துகளில் ஒன்றை சொல்லுவார் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவர் சொன்னதை கேட்டு பகீரென்று ஆனது. ஆம் என்னப்பா இது குடிகாரன் போல இருக்கிறது என்பது அவருடைய கருத்து. மனம் உடைந்து சுக்கு நூறானாது.
சுடுதண்ணி கூட குடிக்க யோசிக்கும் என்னை பற்றி நன்கறிந்த அவரே இப்படி கேட்கும் போது நிலவரம் கலவரம் என்பது தெளிவாக புரிந்தது. படத்தை பார்த்தால் தான் தெரிகிறது கண்கள் சிவந்து ஒரு மாதிரியாக தான் இருந்தது. ஆகா எத்தனை எத்தனை முறை குடிகாரர்களை கிண்டலடித்தும், திட்டியும் பேசியிருப்பேன். அந்த சொற்கள் (செயல்கள்) இப்படி பழிவாங்கும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. இத்தனைக்கும் நான் தாழ்வாக பேசியவர்கள் ஒன்று உற்றார் , உறவினராக, நண்பராக தான் இருந்திருப்பார்கள்.
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய் – என்ற வாக்கியம் எவ்வளவு உண்மை என்பது எனது படத்தை பார்க்கும் போது தான் எனக்கே புரிந்தது. எந்த ஒருவரை பற்றியும் ஓரளவேனும் முழுமையாக அறியாமல் ஒரு முடிவுக்கு வருவது எவ்வளவு மடமைத்தனம். கண்ணிருந்தும் குருடராய், காது இருந்து செவிடராய் வாழுதல் மிக கொடுமையே.

குடிகாரர்
இங்கேயுள்ள படம் எனது அலுலவக மாடியிலிருந்து சாலையில் குடித்து உருண்டு கிடப்பவரை நானே எடுத்தது. எவ்வளவு கொடுமை. இவர்களை நம்பியுள்ள குடும்பத்தினர் கதி நினைக்கவே பரிதாபமாக உள்ளது.
இது இருக்கட்டும் என்னால் அனுப்ப பட்ட படம் என்னாச்சு என்றால் போன மச்சான் திரும்பி வந்தான். . 🙂 🙂
Leave a Reply