வழமை போல ஆத்தாவினை சந்திக்க வெள்ளைவேட்டி மனிதர் ஒருவர் வந்திருந்தார். ஊர் நாயம், உலக நாயம் எல்லாம் பேசி விட்டு முக்கியமான சமாச்சாரம் ஒன்றையும் சொல்லி சென்றார். சில மாதம் முன்னர் எனக்கான வரன் தேடும் படலத்தில் ஒரு பெண் வீட்டாரிடம் பேசியிருந்தார்கள். அவர்கள் ஒரு சமயம் சரி என்பதாகவும், ஒரு சமயம் பின்வாங்குவதாகவும் இருந்தார்கள். எம்மைவிட சற்றே உயர்தரமும் பெண்ணுக்கு மிகச்சிறு உடல் குறைபாடாகவும் நிலவரம். பாரம்பரியமாக தெரிந்த குடும்பம் என்ற ரீதியில் சரியேன்றே பேச்சு போய் கொண்டிருந்தது. மணமான பின் வாழ்விடத்தையெல்லாம் நான் அவர் பணிபுரியும் ஊருக்கு மாறிடனும் என்றெல்லாம் பேச்சு வந்தது. நானும் எப்ப தான் அந்த ஊரை சுற்றி பார்ப்பது என்று சரியென மண்டையை ஆட்டி வைத்திருந்தேன். பின்னர் பேச்சு சுரத்து குறைந்து ஏனோ நின்று விட்டது. ஒரு நாள் திடீரென அப்பெண்ணிற்க்கு நிச்சயதார்த்தம் என்று ஒளிப்படங்கள் கண்டேன், சரி வேறு எங்கோ முடிந்து விட்டது என்று ஆத்தாவும் வேறு சோலி பார்க்க ஆரம்பித்து விட்டார். நானும் அந்த ஊரை சுற்றி பார்க்கும் வாய்ப்பு கெட்டதே என்று அங்கலாய்த்து, வருத்த பட்டேன்..
இன்று வந்த வெள்ளை வேட்டி ஆசாமியோ அந்த குறிப்பிட்ட பெண்ணின் திருமணம் விவாகரத்தினை நோக்கி சென்று கொண்டுள்ளது என்றார். அட ஒரு மூணு மாசம் கூட ஆகவில்லையே என்ன சமாச்சாரம் என்று ஆத்தா தூண்டி துருவ அந்த பெண்ணிற்க்கு நடைபெற்றது காதல் திருமணம், அதையும் சரியென்றே பெரியோர்களே நடத்தி வைத்துள்ளனர். திருமணத்திற்க்கு பின்னர் தான் அந்த பெண்ணிற்க்கு இருந்த சிறு குறைபாடு அந்த காதல் கணவனுக்கு பூதாகரமாக தெரிந்துள்ளதாம். ஆண், பெண் இருவருமே சிறு வயதில்லை. அவர்களுக்கு காலா காலத்தில் திருமணம் ஆகி இருந்தால் இருவருக்குமே வயசுக்கு வந்த குழந்தைகள் இருக்கும், இவ்விருவரும் என்ன கண்றாவி காதல் செய்தார்கள் என்று புரியவில்லை. இத்தனை வருடம் என்ன காதலித்தார்கள், அப்படியென்ன பொறுமையின்றி ஓரிரு மாதங்களில் விவாகரத்து நோக்கிய பயணம். இத்தனைக்கும் அவருக்கு இருப்பது ஊனமல்ல. வெளியே பொதுவில் தெரிய கூடிய சிறு குறை பாடுதான். நாளைக்கே ஆணுக்கு ஒரு விபத்தில் ஏதும் ஊனம் வராது என்று ஏதும் நிச்சயமுள்ளதா வாழ்க்கை? இந்தளவுக்கு கூட விட்டு கொடுத்து செல்ல இயலாதா. என்ன கொடுமையடா ஆண்டவா என்று ஆத்தாவுக்கு மனசே ஆறவில்லை.
Leave a Reply