கடந்த நாட்களாக ஆத்தாவிற்க்கு சில தற்செயலான விசயங்கள் வந்தடைகின்றன. கவனம் இங்கே நான் “தற்செயல்” என்ற பதத்தையே பயன்படுத்தியுள்ளேன். இது ஒரு சீசன் போல. ஒரே பிரச்சினை, ஒரே காரணம், ஒரே முடிவு என்று மூன்று விசயங்கள். காதலானது கசிந்துருகி பெரியவர்களால் ஆசிர்வதிக்க பட்டு, மணம் செய்து, தனியே வாழவைக்க பட்டு விவாகரத்தில் சென்று நின்றுள்ளன. ஒரே போல உள்ளது என்றாலும் எதிர்கால வரலாற்று குறிப்புகளுக்காக இங்கே ஒவ்வொன்றையும் பதிவு செய்து வைக்கிறேன்.
1. எதிர் வீட்டு உரிமையாளரின் மகன். இவர் காதலித்த பெண்ணை இரு வருடம் சொந்தமாக செலவு செய்து படிக்க வைத்திருக்கிறார். பக்கத்து ஊர் பெண். காதலி படிக்கும் போது பையன் குறைந்த படிப்பறிவில் வேலைக்கு சென்று சம்பாதித்ததை காதல் வளர கொட்டியுள்ளார். இரு வீட்டு பெரியவர்களும் ஆசிர்வதித்து திருமணத்தை நடத்தி வைத்து, தனி குடித்தனம் வைத்து விட்டனர். நடைமுறை வாழ்வில் கசப்பு ஏற்பட, அண்ணாரின் தீராத விளையாட்டு பிள்ளையென்ற முற்கால வரலாறுகள் அரசல்புரசலாக தெரிய வர பெண் விட்டால் போதும் என்று கிளம்பி அம்மா வீட்டுக்கு போயாச்சு. பெண்ணை பெற்றவர்களோ இந்த வாழ்க்கையை தொடர வலியுறுத்துகிறார்கள். பெண் ஒப்புக்கவில்லை. இரு தரப்பு சமாதான பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பரஸ்பர விவாகரத்து முடிவினை நோக்கி செல்கிறது.
2. எங்கள் ஊரின் பிரபல டியூசன் சென்டரின் கட்டிட உரிமையாளரின் மகன். இவர் காதலித்த பெண்ணுக்கு மடிக் கணிணியெல்லாம் காதல் பருவத்தில் வாங்கி கொடுத்து காதலை வளர்த்துள்ளார். வழமை போலவே இரு தரப்பு பெற்றோரும் ஆசிர்வதித்து திருமணத்தை நடத்தி, தனியே வாழ வைத்தனர். காதல் கால கொஞ்சலும், மயக்கமும் தீர்ந்து நடைமுறை பொருளாதாரம் உறைத்துள்ளது. பெண் தாலியினை கழட்டி வீசிவிட்டு ரகளையை ஆரம்பித்து விட்டார். அய்யோ பாவம் என்று சமாதானம் செய்ய போன பையனின் அண்ணன் மீது காவல் துறை வழக்கு மிரட்டல் வர அவர் விட்டால் போது என்று ஓடி வந்து விட்டார். இது நீதிமன்றம் சென்று முடியுமா அல்லது இருதரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பிரியுமா என்பது மட்டுமே இப்போதைக்கு கேள்விக்குறி.
3. எங்கள் பின்வீதி வீட்டுகாரர் மகன் மற்றும் எங்கள் ஊரின் பிரபல தள்ளுவண்டி சிறுதீனிகடைக்காரர் மகள். இரு தரப்பும் சற்றே பொருளாதார செழுமையில்லாத காரணத்தால் திரைபடம் போன்ற எளிய செலவுகளை தாண்டியிராத காதல். இரு வீட்டார் ஆசிர்வதிக்க திருமணம் நடத்தி வைக்க பட்டது. வழமை போல சண்டை, சச்சரவுகள் வந்து இரு தரப்பும் விவாகரத்தினை நாட வேண்டியதாகி விட்டது. கொடுமை இந்த நிலையில் தான். வழக்கறிஞர்கள் இன்னமும் பெண் சட்டபடி வயது வந்தோர் அல்ல என்பதால், நடந்தது திருமணமே கிடையாது. ஏதேனும் மேற்க்கொண்டு செய்தால் இரு தரப்பு பெரியவர்களும் உள்ளே இருக்க வேண்டிய சூழல் என்று திருப்பி அனுப்பி விட்டார்கள். ஊராரை கூட்டி பஞ்சாயத்து வைத்து விவாகரத்து செய்துக்கலாம் என்றாலோ எந்த வெள்ளை சட்டை ஆசாமிகளும் இந்த மாதிரி விவாகரத்து பஞ்சாயத்துக்கு வரமாட்டோம். என்று சென்டிமெண்ட் பேசி திருப்பி அனுப்பி விடுகிறார்கள். நல்ல வேளை அந்த குழந்தைக்கு ஒரு குழந்தை உண்டாகவில்லை என்பது ஆண்டவன் கருணையின்றி வேறில்லை.
இந்த மூன்று வழக்கிலும் சாதி பிரச்சினையே கிடையாது. ஒரே சாதிக்குள் பூத்த காதல். அதனால் வெளியே இருந்து பெரியவர்கள் பிரிக்க முனைய கொஞ்சம் கூட தேவையே இல்லை. நடப்பிலும் அவ்வாறே பெரியவர்கள் இன்னமும் சேர்த்து வைக்கவே முனைகிறார்கள். ஒன்றும் காரியமாவதாக காணோம். எப்படி ஒரே சாதியில் திட்டமிட்டு காதலிக்கிறார்கள் என்பதும் ஆச்சர்யமான கேள்வி குறியே.
முதலிரண்டும் வெகு நிச்சயமாக பொருளாதார தேவைகளை தமது முன்னாள் காதலன் நிறைவேற்ற இயலாது என்பதால் உண்டாதே அன்றி வேறில்லை. மூன்றாவது வழக்கில் பெண்ணுக்கு இந்த பொருளாதார காரணமும், பையனுக்கு சந்தேக நோயும் ஒட்டி கொண்டு விட்டது. எனது ஆத்தாவுக்கு வருத்தமும், அங்கலாய்ப்புமாக காலம் ஓடுகிறது.
Leave a Reply