எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் இணையதளம் குறித்து ஜெயமோகன் அவர்கள் அ.முத்துலிங்கத்துக்கு வயது ஆறு கட்டுரை வாயிலாக அறிந்தேன். http://www.amuttu.com/ என்பது அவர் தளத்தின் பெயராகும். தளத்தில் அவரே சிறப்பாக சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், கவிதைகள் என்று பிரித்து வைத்திருந்தாலும் காலக் கிரமமாக படிப்பது என் விருப்பமானது. பெட்டகம் (Archive ) வசதியை ஏனோ காண இயலவில்லை.
தளத்தில் உள்ள முதல் கட்டுரையிலிருந்து படிக்க முயன்று http://www.amuttu.com/index.php?view=pages&id=1 என்று நேரிடையாக முகவரி உள்ளீடு செய்து பார்த்ததில் ஆரம்பத்தில் 50, 75 என்ற எண்களிலேயே கட்டுரைகள் கிடைத்தன. எப்படியோ விரும்பிய படி வெளியிடப் பட்ட கால வரிசையில் படிக்க ஆயிற்று.
சிறு வயதில் தேநீர் கடை இரவல் கன்னி தீவு வாசிப்பிலிருந்து மெல்ல மெல்ல வாசிக்கும் முறையானது (உள் வாங்கும் முறையல்ல) முற்றிலும் மாறி வருகிறது. இரவல் புத்தகமாகி, சொந்த புத்தகமாக வாங்கி, பொது நூலகமாகி, தியாகு கட்டண நூலகமாகி, இணைய வழியாகி பல்வேறு கட்டங்களை அடைந்துள்ளது. அ.முத்துலிங்கம் அவர்களின் தளத்தை படிக்கும் போது இணைய வழியே கணிணியில் படிக்காது புதிய 3G அலைபேசி வழியே படிக்க முயன்றேன். இவருடைய ஒவ்வொரு கட்டுரைகளும் மிக நீளமாக (நீலமாக அல்ல.. 🙂 ) அலைபேசிக்கு தோன்றியிருக்கும் போல. கிட்டதட்ட 450கேபி அளவுக்கு மேலேயுள்ள கோப்புகள் இறங்கிய பின் படிக்கும் போது கடைசி ஆக ஆக நம் இல்ல விருந்துகளில் பற்றாகுறையால் போடும் உப்புமா,காபி போல ஆகி கடைசி சில வரிகள், பத்திகள் தெரியவே இல்லை. வேறுவழியின்றி மீண்டும் கணிணி வழியே படிக்க வேண்டியதாயிற்று.
வாழ்வியலை அனைத்து கோணங்களிலும் எளிதில் எடுத்துக் கொள்கிறார். கண் பார்வையற்றோர் உணவகம் சென்று உண்பதோ, குளிரூட்டி இயந்திரம் பழுது பார்ப்பவர் கேட்கும் கட்டணத்திலோ, கனடிய அரசாங்கம் தர வேண்டிய சில்லறை பாக்கிக்காக அனுப்பும் பத்திரம் பற்றிய கட்டுரையோ அனைத்தும் விதவிமான சுவையை உடையது.
மிகவும் தவறவிட்ட ஏழுத்தாளர் என்று பா.ராகவன் அவர்கள் சொன்னது மிகவும் சரியானதே.
Leave a Reply