எமது புதிய தொழிற் கொள்கை என்பதில் உள்ள “எமது” என்பதற்கான விளக்கத்தை கொடுத்து விடுவது. நாங்கள் ஒரு குறும் தொழில்முனைவோர். எங்கள் நிறுவனம் ஒற்றைஇலக்க (1-9) பணியாளர் கட்டமைப்பினை கொண்டது. துவங்க பட்டு எட்டு ஆண்டு காலம் ஆனது. மென்பொருள் மற்றும் இணைய தள, இணைய செயலிகள் வடிவமைப்பு சேவையே எங்கள் வர்த்தகம். உள்நாடு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் உண்டு. பல்வேறு தரப்பட்ட பணிச் சூழல்களில் செயலிகள் உருவாக்கியுள்ள அனுபவம் உண்டு.
எம்மை பற்றிய அறிமுகம் சரி அதென்ன தொழிற்கொள்கை என்று நீங்கள் கேட்பது புரிகிறது. எந்தவொரு நிறுவனமும் அவ்வப்போது தங்கள் எதிர்கால திட்டம் பற்றியும், கடந்த கால அனுபவம் காரணமாகவும் சில இலக்குகளையும், கட்டுபாடுகளையும் தங்களுக்கு தாங்களே நிர்ணயித்து கொள்வார்கள். உதாரணமாக எதிர்கால திட்டம் என்பது அமெரிக்க சிலிகான் பள்ளதாக்கு பகுதியினுள் மைக்ரோசாப்ட்க்கு இணையான அலுவலகம் துவங்குவது போன்றவைகளாகவும், கட்டுபாடுகளாக இந்த கூடை வைத்திருப்பவர்களுக்கு எல்லாம் பெட்ரோமேக்ஸ் லைட் வாடகைக்கு தருவதில்லை என்பது போல அமைத்து கொள்வார்கள். அது போல எங்கள் நிறுவனத்திற்கும் ஒரு தொழிற்கொள்கையினை உருவாக்கும் முயற்சியே இங்கு நீங்கள் படிப்பது.
முதலில் கடந்த கால வரலாற்றினை பார்ப்போம். குறிபிட்ட காலம் வரையிலும் நாங்கள் தனிபயனாளர் (single user) மற்றும் ஒரு சில கணிணிகள் இணைந்த அளவிலான பல பயனாளர்கள் (multi user) தொழிலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்த கூடிய செயலிகள் (applications) உருவாக்கி வந்தோம். பெரும்பாலும் இவர்கள் உள்நாட்டு மற்றும் மிக சிறிய அளவிலான வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் ஆவார்கள். இணையம் பரவலாக துவங்கிய கால கட்டத்தில் இணைய தள வடிவமைப்புகள் (web design) மற்றும் இணைய செயலிகள்(web applications) உருவாக்க துவங்கினோம். இதில் இணைய தள வடிவமைப்பு என்பதில் பெரும்பாலும் உள்நாட்டு வாடிக்கையாளர்களே. இணைய செயலிகள் என்பதில் பெரும்பாலும் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள். இணைய தள வடிவமைப்பு
என்பது ஒரு முறை செய்ய கூடிய பணிக்கான கூலிக்கு வேலை என்பதாக முடிந்து விடும். அதே சமயம் இணைய செயலிகள் என்பது பெரும்பாலும் புகழ்பெற்ற திறவூற்று திட்டங்களுடன் (open source) இணைந்ததாக அமைந்தது. ட்ரூபால் (drupal), வேர்ட் பிரஸ்(wordpress), ஈகாமர்ஸ்(e-commerce) போன்றவைகள் உதாரணமாக சொல்ல படக்கூடியவைகள்.
இணையதள வடிவமைப்புகளில் பெரிய பிரச்சினைகள் ஏதுவும் இல்லை. ஒரு முறை வாடிக்கையாளரை திருப்தி செய்தால் போதுமானது. பின்னர் சில காலம் கழித்தே மாற்றங்கள், திருத்தங்கள் வரும். பணரீதியில் பணி முடிவானவுடன் நமக்கு வரவேண்டியது வந்து விடும். அதே சமயம் இணைய செயலிகள் என்பது தொடர்ந்த மாற்றங்களும், புதுப்பிப்புகளும் கொண்ட பணி. துவக்கத்தில் ஒரு குறிப்பிட்ட
அளவிலான நிதி ஒதுக்கீடு செய்து பணியினை துவங்க கூடியவர்கள் தொடர்ந்த மாற்றங்களை செய்ய இயலாது சுணங்கி விடுகின்றனர் அல்லது தளம் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை என்பதால் தொடராமல் விட்டு விடுகின்றனர். நாங்கள் இணையசெயலி திட்டகளினுள் தொடர்ந்த வருவாய் வாய்ப்பு இருப்பதாக உணர்ந்தாலும் இது போன்ற இடைநிற்றல் வீதம் மிக அதிகமாகி விடுகிறது.
இதே சமயம் எங்களின் தனி மற்றும் பலபயனாளர் செயலிகள் பணிதிட்டங்கள் இடையிடையே வந்த வண்ணம் இருந்தன. அவைகளில் பணி முடிப்பு என்பதனை நோக்கமாக கொண்டு செயலாற்றினோமே ஒழிய பல்வேறு பட்ட செயலிகளிடையே ஒருங்கிணைப்பு போன்ற எதிர்கால சாத்தியகூறுகளை யோசித்து அவைகளை அறிமுகம் செய்யாதே விட்டு வந்துள்ளோம். ஆனால் இதற்கான தேவைகளும், போட்டியாளர்களும் சற்றும் குறையவில்லை. பெரும்பாலும் உள்நாட்டு வாடிக்கையாளர்களே. கையிலே காசு, வாயிலே தோசை என்பதாக உடனடியாக முடிய கூடிய பணித்திட்டங்கள்.
இந்த சூழலில் பல யோசனைகளுக்கு பின்னராக நாங்கள் கண்டறிந்தது பெரிய திட்டங்களாக கருதபடும் இணைய செயலிகளுக்கான வாடிக்கையாளர்களை மிக சிரமபட்டே தேடிப்பிடிக்கிறோம். ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளர் தேவைக்காக புதியபுதிய தொழில்நுட்பம் கற்றல், சோதித்தல் என்று எமது மூலாதாரங்களை செலவு செய்ய வேண்டியுள்ளது. அந்த திட்டம் விட்டு வேறு ஒன்றுக்கு சென்றால் இந்த நுட்பத்தை விட்டு வேறு ஒன்றுக்கு பழக வேண்டியுள்ளது. வரக்கூடிய லாபத்திற்க்கும், இது போன்ற மறைமுக செலவிற்க்கும் சரியாக போய் விடுகிறது. அதே சமயம் பாரம்பரிய செயலிகளுக்கான தேவைகள் தொடர்ந்து இருந்த வண்ணமே
உள்ளது. எனவே இணைய செயலிகளுக்கான வாடிக்கையாளர்களை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் எங்களின் பாரம்பரிய வாடிக்கையாளர் பகுதியான SME – Small and Medium Entrepreneur – சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களை கவனத்தில் கொண்டு அந்த பகுதிக்கான செயலிகளை மேம்படுத்துவது, சந்தை படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ள போகிறோம்.
மேற்கண்ட செயலிகள் என்பது Billing, Material Management போன்றவைகளாகும். இவைகளை ஒன்றுவிட்ட மாதங்கள் வீதமாக ஒரு வருடத்தில் 6 செயலிகள் என்பதாக கொண்டு தொடர்ந்து மேம்படுத்துதல் மற்றும் சந்தையிடல் என்பதாக கொண்டு போக உள்ளோம். தொழில் முன்னேற்ற திட்டங்களை நோக்கும் போது இது சற்றே பின்னோக்கியதாக தோன்றும். ஆனால் தொழில் நுட்ப ரீதியில்
ஆண்ட்ராய்டு, விண்8 செயலிகள் என்று நிறைய முன்னேற்றங்களை செய்திட்ட நல்வாய்ப்புள்ளது.
மேற்க்கண்டவாறு அனுபவங்களையும், எதிர்கால வாய்ப்புகளையும் கொண்டு எடுக்க படும் தீர்மானங்களே தொழிற்கொள்கை எனப்படும். இதனடிப்படையில் சற்று காலம் இயங்கிய பின்னரே இதன் சாதக பாதகங்களை உணர இயலும். அதற்கு ஏற்ப தேவையான மாற்றங்களையோ, திருத்தங்களையோ செய்து மென்மேலும் தொழிலை முன்னேற்ற வேண்டும்.
தொழிற் பிரச்சினைகள்
மேற்காணும் படத்தில் கண்டுள்ள படி தொழிற் பிரச்சினைகளில் ஒரு பகுதியினை பற்றி மட்டுமே இக்கட்டுரையில் பேசியுள்ளேன். மற்றவைகள் குறித்து அடுத்தடுத்து வரக்கூடும்.
Leave a Reply