முற்காலத்தில் உழைப்பு என்பதனை நிர்ணயம் செய்ய இங்குள்ள படத்தில் காட்ட பட்டுள்ளது போல Theater, Bar, Beach, Tennis Court போன்றவைகள் மனிதர்களை திசை திருப்பி உற்பத்தி திறனை பாதிப்பதாக இருந்தன. இவைகளில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று பலரும் ஆலோசனை சொல்லுவதுண்டு. இன்றைய நவீன காலத்தில் இவை போன்ற மரபான விசயங்கள் தவிர்த்து புதிய புதிய திசை திருப்பல்கள் வந்துள்ளன. பேஸ்புக், குழுமங்கள், வாட்ஸ்அப் போன்றவைகள் ஆகும்.
எனது பணி கணிணியில் தான். கணிணியில் அமர்ந்திருக்கும் நேரம் எல்லாம் எனது பணிநேரமாக கருதலாமா என்றால் இல்லை என்பது தான் தற்போதைய பிரச்சினை. உலாவியில் ஒரு மடிப்பில்(tab) நமது பணியும், அடுத்த மடிப்பில் பொழுது போக்கு அம்சங்களுமாக வாழ்வின் பொன்னான மணித்துளிகள் வீணடிக்க பட அதிக வாய்ப்புகளுடன் அன்றாட வாழ்வு கடந்து செல்கிறது. வெட்டியாக செல்ல கூடிய காலத்திற்கு ஒரு அளவில்லாது செல்லுவதை கண்டு அதை கட்டு படுத்த நானாக சில கட்டுபாடுகளை மேற்கொண்டுள்ளேன். அவைகளை பற்றி சற்று விளக்கமாக பார்ப்போம்.
விடுமுறை தினங்களில் மட்டுமே பேஸ்புக் (மற்றும் இன்ன பிற) சமூக வலைதளங்களை எட்டி பார்ப்பது. ஓரிரு நாட்கள் தாமதமாக சில செய்திகளை அறிவதனால் நமக்கு வாழ்வில் எந்த பெரிய நட்டமும் வந்து விட போவதில்லை. அதிலும் நட்புகளை தனிவாழ்வு மட்டும் அரசியல், வணிகம் என்பதாக பிரித்து கொண்டு விட்டால் முன்னுரிமைகள் கொடுத்து நாம் படிக்க உபயோகமாக இருக்கும். தனிவாழ்வு குறித்தானவர்களுடையதில் முதலில் நாம் வாழ்த்து சொல்லுவது, பின்னூட்டம் செய்வது போன்றவை முக்கியமானதாக இருக்கும். இதன் பின்னர் வர்த்தக தொடர்புடையவர்களை கவனிக்க வேண்டும். இதன் பின்னரும் பொழுது நமக்கும் இருக்கும் பட்சத்தில் அரசியல் மற்றும் இன்ன பிற ஆரோக்கியம், கலை போன்ற பகுதிகளில் பார்வையை செலுத்துவது வழக்கமாகி வருகிறது.
மின்னஞ்சல் குழுமங்களிலும் சற்று ஈடுபாட்டுடன் இருந்தது உண்டு. சமீபமாக நாம் ரசிக்கும் மற்றும் கற்று கொள்ள கூடிய சங்கதிகள் இருக்க கூடிய குழுமங்கள் தவிர மற்ற பொது அரட்டை அடிப்படையிலான குழுமங்களில் இருந்து மெல்ல ஒதுங்கி கொண்டு விட்டேன். உலகின் பலவிசயங்கள் பற்றிய நமது கருத்தினை வெளிப்படுத்தாமல் போவதால் உலகம் சுற்றுவது நின்று விட போவதில்லை தானே.
கணிணியை தாண்டியும் தற்போது நமது நேரத்தை அதிகமும் எடுத்து கொள்ள கூடியதாக அலைபேசிகள் வளர்ந்து விட்டன. வாட்ஸ்அப் போன்றவைகள் உபயோகமற்ற அரட்டைகள் மூலமாக நம் கவனத்தை திசை திருப்பி பெரிய அளவிலான நேரத்தை தின்று விடுகின்றன. தவிரவும் நண்பர்கள் பகிரும் கோப்பானது நமது அலைவரிசை அளவையும், அதற்கான கட்டணத்தையும் உண்டுவிடுகின்றன. தவிரவும் தங்கள் அரட்டை பேச்சுக்கு உடனடியாக பதில் அளிக்காவிடில் கோவித்து கொள்பவர்கள் வேறு இருக்கிறார்கள். நாமோ மிக முக்கிய ஆலோசனை கூட்டத்தில் இருப்போம். இப்படி உடனடியாக பதிலினை எதிர்பார்ப்பவர்களை எல்லாம் தவிர்க்கவே வாட்ஸ்அப்பினை பெரும்பாலான சமயங்களில் முடக்கியே வைக்க வேண்டியுள்ளது.
நம்முடைய கருத்துகளை பிறரிடம் வெளிபடுத்தி கொள்ள ஓரிரு வழிமுறைகளே எளிதானதாகவும், நாமே நமது வெளியீடுகளை கையாள கூடியதாகவும் தோன்றுகின்றன. நான் முதலாவதாக கருதுவது மின்னஞ்சல். இதனை நாம் மின்னஞ்சல் செயலிகள் மூலமாக நாம்மிடையே காப்பு நகலாக வைத்து கொள்ளலாம். இதனை தவிர்த்தால் வேர்ட் பிரஸ் போன்ற சுதந்திர செயலிகள் அடிப்படையிலான வலைபதிவுகள். இதன் நிரல்கள், தரவு தளங்கள் மற்றும் அனைத்தையும் நம் வசம் வைத்து கொள்ளலாம். பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இருந்து வருங்காலத்தில் நாம் வெளியேற வேண்டி வந்தால் நமக்கு ஒரு சில இடங்களில் நமது வெளியீடுகளுக்கு காப்புநகல் வசதி கிடைத்தாலும் அதனை வைத்து கொண்டு மற்றொரு இடத்தில் நம்மை நிலை நிறுத்தி கொள்ள (restore) செய்துக்க தற்போதைக்கு வழியில்லை என்பதே நிதர்சனம்.
நீண்ட காலமாக பல்வேறு இடங்களில் எழுதியது எதனையும் இன்று என்னால் தொகுக்க இயலாது. இன்று எண்ணி பார்க்கையில் அவைகளையெல்லாம் இந்த வலைபதிவில் எழுதியிருந்தால் எனது மனவோட்டம் அந்தந்த கால காட்டத்தில் எவ்வாறு இருந்தது என்பதை அறிய இன்று ரொம்ப வசதியாக இருந்திருக்கும். மிக அதிகம் நம் கவனத்தை சமூகவலை தளங்களில் மற்றும் வெட்டி அரட்டைகளில் செலுத்தாது கட்டுபடுத்துதலே என் போன்றவர்களுக்கு அத்தியாவசிய மற்றும் முதன்மையான தேவையாக உள்ளது.
தவிர்க்கவேண்டும் என்று நினைத்தால் அதை நாடிச்செல்வதுதான் மன குரங்கு. பேஷ்புக்கை உமது உழைப்பைக் காட்டும் இடமாகவோ, உமது நிறுவனத்தின் விபரத்தைக் காட்டும் இடமாகவோ பயன்படுத்தும் வரை நேரவிரயம் கிடையாது. மீறி வாக்குவாதம், அரட்டை என்று செல்லும்போதுதான் இதெல்லாம். (நான் சொல்வது பேக் ஐடிக்குப் பொருந்தாது கி கி)
a clear thinking really.keep it up
natchander தங்கள் வருகைக்கும், கருத்திற்க்கும் மிக்க நன்றி.