இன்று டெல்லி மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு வாழ்த்துகள். இந்திய மக்களாட்சி முறையில் பல்வேறு சந்தர்பங்களில் புதிய புதிய தலைவர்கள் வெகு குறுகிய காலத்தில் புதிய மாநில கட்சியினை துவக்கி ஆட்சியினை பிடித்துள்ளார்கள். புதுவையின் திரு.ரங்கசாமி போன்றவர்களை உதாரணமாக காட்டலாம். இவர்கள் அனைவருக்குமே வேறு ஒரு கட்சியில் இருந்து பிரிந்து வந்த முன்அனுபவம் இருக்கும். எந்தவித கட்சி அரசியலில் முன்அனுபவமும் இன்றி, பாரம்பரிய கொள்கை – இந்துயிசம், சோசலிசம், கம்யூனிசம் – என எதையும் மேற்கொள்ளாமல் சமஅரசியல் அரங்கில் புதியதான ஊழல் ஒழிப்பு, நலன்புரி அரசாங்கம் என்ற ஒரு (போதை மயக்க) தேர்தல் அறிக்கையுடன் போட்டியிட்டு ஆட்சியினை பிடித்துள்ளார்.
வளைகுடா போன்ற இடங்களில் அரபு வசந்தம் வீசி கொண்டிருந்த பிண்ணனியில் இங்கும் அசாரே போன்றவர்கள் புரட்சியினை பற்றி பேசி கொண்டிருந்த சமயத்தில் பிறநாடுகளில் வசந்த காற்றடிக்க பாய்ந்தோடி வந்த பொருளாதாரம் இங்கும் பாய்கிறதோ என்ற சந்தேகம் பட்டவர்களில் நானும் ஒருவன். இன்றளவும் சம்பந்த பட்டவர்கள் நேர்மையுடன் போராடியிருந்தாலும் அவர்களின் போராட்ட திறனை தமக்கு சாதகமாகவும், மிக பிரம்மாண்டமாக தோற்றம் உருவாக்கவும் பல்வேறு தரப்பினர் போராட்டத்தினை பயன்படுத்தி கொண்டார்கள் என்பதில் இன்னமும் எனக்கு மாற்று கருத்தில்லை. இதே போல ஊதி பெரிதாக்க பட்ட போரட்டம் ஒன்று நம் மாநிலத்தில் நவுத்து போய் விட்டதையும் நாம் கண்டோம். இத்தனைக்கும் இந்த போராட்டம் ஆண்டுகணக்கில் நடத்த பட்டது. தோல்வி முடிவுக்கு பின்னர் சோற்றால் அடித்த பிண்டங்கள் போன்ற வாழ்த்தினை தமிழனுக்கு வழங்காது போராட்ட தலைவர் தவிர்த்து விட்டது நம் நல்ஊழ்.
டெல்லியின் கடந்த தேர்தலில் பற்றாகுறை சட்டமன்ற உறுப்பினர்களுடன் வெற்றி பெற்றதேனும் ஓரளவு வசந்த காற்றின் பின்விளைவுகள் என்று எடுத்து கொள்ளலாம். ஆனால் சட்ட மன்றம் கலைத்த பின் மோடி எனும் சுனாமி டெல்லி உட்பட பாரத தேசமெங்கும் கரைகடந்த சூழலில் ஒரு வருடம் கடந்த பின் மீண்டும் கிட்டதட்ட அனைத்து இடங்களையும் வென்று வருவது என்பது ஊதி பெருக்க பட்ட ஒரு விசயம் என்று எடுத்து கொள்ள இயலாது. இது முற்றிலும் மக்களின் தீர்ப்பே. திரு.அரவிந்த் கெஜ்ரிவால் மீது வெளிநாட்டு நன்கொடை பினாமி, மக்களை ஏமாற்றும் வாக்குறுதி அரசியல்வியாதி என்று எந்தவகையான குற்றசாட்டுகள் வைக்க பட்டாலும் இவருக்கு வாழ்த்துகள் சொல்வதை காட்டிலும் நன்றி சொல்லுவது மிக முக்கியமான ஒன்று.
வருங்காலத்தில் அரசியலுக்கு வர எண்ணும் பலருக்கும் இவரே முன்னோடியாக இருக்க போவது என்பது உறுதி. மக்களாட்சி மாண்பினை மீண்டும் ஒரு முறை உறுதி செய்ய டெல்லிவாசிகளுக்கு அரிய வாய்ப்பினை இவரே வழங்கியுள்ளார். தமிழகத்தில் இரு வேறு திராவிட கழகங்களுக்கு மாற்றாக வேறு யாரேனும் வந்தாக வேண்டிய காலத் தேவை மிக நெருங்கி விட்டதாக தோன்றுகிறது. பாஜக போன்றவைகள் வளர்ந்து வருவது சாத்தியமான ஒன்றாக தோன்றவில்லை. வாசன் போன்ற திரை உலக பிரபலமாக இல்லாத ஒருவர் முன்னேறி வருவது சாத்தியமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஒளிப்படங்கள் அற்று வெறுமே வெற்றுதனமான, வரண்ட முறையில் எழுத்துகள் மட்டுமே அடங்கிய பாணியில் கட்டுரைகள் எழுத துவங்கியுள்ளேன். பத்தியமைப்பில் கூட சோதனை முறையில் இது எந்தளவு நடைமுறைக்கு ஒத்து வரப்போகிறது என்பதை சில கட்டுரைகள் எழுதிய பின்னே கணிக்க இயலும்.
உங்கள் கருத்துகளை மறவாது பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
மக்களாட்சியில் எவருக்கும் வர உரிமை உண்டு. கேஜரிக்கு வாழ்த்துக்கள். கிரண்பேடி அல்வா வாங்கியதில் மகிழ்ச்சியே