பங்கு முதலீடு பற்றி ஒரு எளிய எடுத்துக் காட்டுடன் விளக்க முயலுகிறேன்.
நம் குடியிருப்பு பகுதியில் தேநீர் கடை இல்லை. என்ன செய்வது புதிதாக உருவாகி வரும் பகுதி என்பதால் யாரும் கடை வைக்கவில்லை. எப்படியோ பெரிசுகள் எல்லாம் கூடி பேசி ஒரு ஆசாமி(பழனிச் சாமி)யை பிடிக்கிறார்கள். அவரே எனக்கு தொழில் தான் தெரியுமோ ஒழிய கடை வைக்கும் அளவுக்கு கையில் முதல் இல்லை என்கிறார். சரி என அனைத்து வீட்டாரும் கூடிப் பேசி ஆளுக்கு ஆயிரம் என்ற அளவில்
பணம் போட்டு கடையை வைப்பது. நம்ம பழனிச்சாமி – ஊரார் தேநீரகம் – என்று தொழிலை நடத்த வேண்டியது என்று முடிவாகியது. அவர் தனது வேலைக்கு தக்க அளவில் மாதாமாதம் சம்பளம் எடுத்துக்க வேண்டியது என்று முடிவாகியது.
கிட்டதட்ட ஐம்பது வீட்டார்கள் பங்குதாரர்கள் அல்லது கூட்டாளிகள் என்ற நிலையில் கடையில் வியாபாரம் துவங்கியது. நம்ம கடையாச்சே என்றும், அந்த பகுதியில் வேறு கடைகள் இல்லை என்ற காரணத்தாலும் கடையில் வியாபாரம் ஓரளவு சூடு பிடிக்க ஆரம்பித்தது. அந்த சமயத்தில மூன்றாவது தெரு தபால்அலுவக கோபாலனுக்கு வடக்கே மாற்றல் வந்து விட்டது. அவர் ஊரை விட்டு போவதால் தன்னுடைய பங்கு பணத்தை மீட்க நினைத்து அதை யாரேனும் வாங்கிக் கொள்கிறீர்களா என்று கேட்கிறார். இரண்டாவது வீதி கணபதிக்கு கடை ஓடும் வேகத்தை பார்த்து நாமே தனியாக போடாது விட்டோமே என்று நினைத்து
இருந்தார். அதனால் அவர் ரூ1,250 கொடுத்து அந்த பங்கை வாங்கிக் கொண்டார். அனைவரும் ஒரு பங்காளிகள் என்றால் நம்ம கணபதியோ இரட்டை பங்காளி என்றாகி விட்டார்.
மெல்ல மெல்ல மேலும் பலரும் வெளியூர் மாற்றல் அது, இது என்று தங்கள் பங்கை விற்க வர கடைசியாக ஒரு பங்கை ரூ.2500 என்ற விலையில் வாங்கினார். ஆக மொத்தம் தற்போதைக்கு ரூ.ஆயிரம் மதிப்புள்ள ஒரு பங்கு ரூ.இரண்டாயிரத்துஐநூறுக்கு விலை போய் உள்ளது. அதற்க்குள் கடை வெகு பிரமாதமாக
ஒடிக் கொண்டு இருக்கிறது. நம்ம கணபதி தான் ஆக மொத்த தனிப்பட்டு அதிக பங்குகள் வைத்துள்ள நபராகி விட்டார். பெரும்பாலும் அவர் சொல்லும் விற்பனை உக்தியையே பழனிச்சாமியும் கேட்டு கடையை நல்ல முறையில் நடத்தி வந்தார். ஒரு வருடம் பூர்த்தியான போது கணக்கு வழக்கு பார்த்து அனைவரும் லாபத்தை
கண்டு மகிழந்து ஒரு பங்குக்கு ரூ150 என்ற அளவில் லாபத்தை எடுத்துக் கொண்டனர். மொத்த லாபமானது ரூ.20,000 ஆகும். அதாவது 40சதம் லாபம். இவர்கள் லாப பங்கீடாக எடுத்துக் கொண்டது போக ரூ.12,500 கடையில் லாபமாக உள்ளது.
இதை வைத்துக் கொண்டு கடையை விஸ்தரிக்க கணபதி யோசனை சொன்னார். பேல்பூரி போன்ற சிற்றுண்டி வகைகள் போட்டால் நன்கு விற்பனையாகுமே என்பது அவர் யோசனை. ஊரார் தேநீரகம் என்பது ஊரார் உணவகம் என்று எதிர்கால யோசனையுடன் பெயர் மாற்றம் பெற்றது. புதிதாக சிற்றுண்டிகள் செய்ய சமையல் ஆள் போடப் பட்டது. அதுவும் சுவையாக இருக்க விற்பனை பிய்த்துக் கொண்டு போனது. இப்போது சும்மா பங்கை விற்கலாம் என்று பேரம் பேச வந்தவரிடம் தான் ரூ.3000 என்றாலும் பங்கை வாங்கிக் கொள்வதாக கணபதி சொல்கிறார். இதில் ஏதோ இருப்பதாக எண்ணிய மற்றொரு நபர் தான் ரூ.4000 வரையிலும் கொடுத்து வாங்குவதாக களமிறங்கு கிறார்.
இதனிடையில் புதிதாக வந்த சமையல்காரருக்கும், பழைய பழனிச்சாமிக்கும் ஒத்து போகாது சமையல்காரர் இடையில் நின்றுவிட்டார். சிற்றுண்டிகள் வேறு ஆட்களால் முந்தைய சுவையினை கொடுக்க இயலவில்லை. விற்பனை இறங்கு முகமாகியது. சரக்குகள் வீணாக ஆரம்பித்து நட்டம் ஏற்பட்டன. கடை தேறாதோ என்ற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டது. ஆளுக்கு ஆள் முந்திக் கொண்டு பற்பல வேறு காரணங்கள் சொலலிக் கொண்டு பங்கை விற்க முனைந்தார்கள். கணபதியோ ஏற்கனவே பல பங்குகள் வைத்துள்ளதால்
இனியும் வாங்கி அதிக நட்டமடைய தயாராக இல்லை என்று சொல்லிவிட்டார்.
ரூ4000 க்கு கேட்க பட்ட பங்கு ஒன்று சடசடவென்று ஆரம்பகால விலையான ஆயிரத்திற்க்கு வந்து விட்டது. அதற்க்கும் வாங்க ஆள் இல்லாததால் ரூ750 க்கு வந்த விலைக்கு விற்க மக்கள் தயாராகினர். இந்த சமயத்தில் எதற்க்கும் இருக்கட்டும் என்று கணபதி மேலும் சில பங்குகளை வாங்கி போட்டார். கிட்டதட்ட பாதி பங்குகள் அவர் கைவசம் வந்தது. அதிக விலை, குறைந்த விலை என்று வாங்கியதன் சராசரி ரூ1500 தான் ஆகிஇருந்தது ஒரு பங்கிற்க்கு.
இப்போது தனது நிறுவனம் என்ற முனைப்புடன் கணபதி பழைய சமையல்காரரை தேடிப் பிடித்து சமாதானம் செய்து கொண்டு வந்து கடையில் வேலையில் அமர்த்தினார். மீண்டும் வியாபாரம் சூடு பிடித்தது. அந்த வருட முடிவில் ரூ50,000 லாபம். இரண்டு மடங்கு லாப பங்கீடு எடுக்க முடிவு செய்து ரூ.300 லாப பங்கீடாக எடுத்துக் கொள்ள பட்டது. இப்போது கிட்டதட்ட கணபதி தான் தனிப்பெரும் பங்காளி.
மேற்க் கண்ட கதையில் இருந்து சில எளிய கேள்விகள்…
1. முதல் வருடம் வந்த நிறுவனத்திற்க்கு லாபம் எவ்வளவு?
2. முதலீட்டாளர்களுக்கு முதல் வருடம் எவவளவு லாபம் கையில் கிடைத்தது?
3. சிற்றுண்டி பகுதியாகி பெயர் மாற்றம் பெற்ற போது ஒரு பங்கின் சொத்து மதிப்பு எவ்வளவு?
4. இரண்டு ஆண்டின் லாப பங்கீட்டனை போட்ட முதலில் இருந்த கழித்த பின்னர் கணபதியின் முதலீடு அந்த நிறுவனத்தில் எவ்வளவு உள்ளது?
கேள்வி கேட்கிறப்ப அமைதியா இருக்கிறது எங்க பாலிசி.
எளிமையான எடுத்துக்காட்டுகளுடன் விளக்கம் தமிழ்பயணியாரின் ஸ்டைல்!
அது சரியண்ணே…
கேட்ட கேள்விக்கு பதில் சொன்னால் தானே மேற்க் கொண்டு போக முடியும்.
இந்த பதில் பின்னூட்டத்தின் மற்றொரு முக்கிய சமாச்சாரம் இது OpenID யில் பின்னூட்டப் பட்டுள்ளது… 🙂