இந்தியாவில் அதிலும் குறிப்பாக இந்து மதம் சார்ந்த அசைவம் என்பது பிறரால் பிரித்து உணர்ந்து கொள்ள இயலாது பெரும் சிக்கலான ஒரு விசயம். இது ஏன் இவ்வளவு இடியாப்ப குழப்பமாக மக்கள் கையாள்கிறார்கள் என்று ஆராய புகுந்தால் இந்து மதத்தின் தொன்மம் மற்றும் இளகிய நிலை புரிய வரும். சிக்கலை இரு பெரும் பிரிவுகளா பிரித்து கொள்ளலாம். 1. சைவம் – அசைவம் , 2. அசைவம் – உட்பிரிவுகள்.
சைவம்-அசைவம் என்பது முதன்மையான குழப்பமாகும். அசைவமே தொடத மற்றும் நினைவால் கூட தீண்டாதவர்களும் இருக்கிறார்கள். கோவிலில் பலியிட்டு (கடா வெட்டு) விருந்து வைப்பவர்களும் இருக்கிறார்கள். மதரீதியில் அசைவம் சாப்பிட கூடாது எனில் இப்படி பலியளிப்பவர்கள் யாரோ? இதில் பிரிவினைவாதிகள் வேறு நாட்டார் தெய்வங்களை வணங்குவோர் தான் அசைவம் உண்கிறார்கள், பெருங்தெய்வத்தை வணங்குபவர்கள் அசைவம் உண்ணுவதில்லை என்று தங்களின் மதமாற்ற நிகழ்வுக்கு தேவையான பிரிவினையை நிலைநிறுத்துகிறார்கள். அதாவது கீழ்சாதி குப்பனும், சுப்பனும் அசைவம் உண்கிறானாம்.. அதே மேல்சாதி சுப்பிரமணியமும், குப்புசாமியும் உண்ணாமல் சாதியத்தை கடைபிடிப்பதாக நிலைநிறுத்த முயலுகிறார்கள். ஆனால் இந்த மதத்தின் பழம்பெரும் நூல்களில் மதத்தின் முக்கியஸ்தர்களாக கருதபடகூடிய பலரும் ஊன் உணவு உண்டுஇருக்கிறார்கள்.
என் தயார் சுத்த சைவம்.. ஆனால் என் தந்தையோ அந்த காலத்தில் நண்பர்களுடன் சேர்ந்து முயல், காடை, கெளதாரி மற்றும் மீன்கள் என்று சகல ஜீவராசிகளையும் வேட்டையாடி உண்டவர். இவர் கொண்டு வரும் ஊனை எப்படி கையில் தொடாது சமைத்து அதில் உப்பு, காரம் கூட பார்க்காமல் சமையலை என் தாயார் முடித்திருப்பார் என்பது இன்றும் எனக்கு வியப்பான விசயமே. இன்றளவும் ஒரு நல்ல அசைவ உணவகத்தில் கிடைக்க கூடிய தரம் மற்றும் சுவையில் செய்து தருகிறார். என்ன இரட்டை குவளை முறைபோல அசைவத்திற்கு என தனி சமையல் பாத்திரங்கள். மற்றபடி கையில் முட்ட கூடாது. இப்படியாக சமூக ரீதயில் சைவவாதிகள் அசைவ விரும்பிகளை தவிர்க்க இயலாது நெகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டு விட பழகிவிட்டார்கள் என்றே தோணுகிறது.
அசைவம் உண்பவர்களிலேயே மிக பெரும்பான்மையோரின் பழக்கத்தை கண்டால் யாருக்கும் தலை சுற்றவே செய்யும். நாளும் கிழமையுமாக கறி உண்ண மாட்டார்களாம். வெள்ளிகிழமை, கிருத்திகை போன்ற நாட்களில் அசைவம் வேகதா அல்லது ஜீரணமாகாதா என்று தெரியவில்லை. உலகில் ஆறு அறிவு உயிரினத்தை தவிர வேறெந்த அசைவ உயிரினமும் நல்ல நாளில் தனது உணவினை தவிர்ப்பதில்லை. யோசித்து பார்த்தால் வெள்ளிகிழமையன்று முயல், மான் போன்றவைகளை உண்பதில்லை என்று சிங்கம், புலிகள் தீர்மானம் செய்தால் நினைக்கவே மெய்சிலிர்கிறது.
அசைவம்-உட்பிரிவுகள் – முதல் பிரிவு பிரச்சினைகளை விட மிகவும் நகைச்சுவையானது இந்த இரண்டாம் பிரிவு. ஆடு, கோழி இவ்விரண்டை தவிர மற்றயவைகள் உண்பதில் வரும் தயக்கமும் புறக்கணிப்பும் சொல்லி மாளா நகைச்சுவை விருந்து. முதலில் மாட்டுக்கறி உண்ணாமை. பசு தாய் போன்றது. பசுவதை ஆகாது என்று சில இந்து இயக்கங்கள் பேசி வருகின்றன. அசைவமே ஆகாது என்பதையாவது உயிர்வதை தவிர்த்தல் என்று புரிந்து கொள்ளலாம். மாட்டுக்கறி குறித்து திரு.ஜெயமோகன் தனது வெண்முரசு தொடரில் பின்வருமாறு புனைகிறார்…
தூயகாடுகளில் வேள்விகளைச் செய்யும்போது இறுதிநாள் ஆகுதியை எட்டுவகை அணியியல்புகள் கொண்ட இளம்பசுவை பலிகொடுத்து அதன் குருதியை எரியளித்து முழுமையாக்கும் தொல்மரபு இருந்தது. வேள்விப்பசுவின் உடல் நூற்றெட்டு தேவர்கள் வந்து குடியேறியமையால் அவர்களின் உடலேயாகும் என்றது வேதமுறைமை. அதன் கருநிறக் கால்களில் வாயுவும் வெண்ணிற வயிற்றில் வருணனும் அதன் செந்நிற நாவில் அனலோனும் கொம்புகளில் யமனும் அமுதூறும் மடியில் சோமனும் ஒளிவிடும் விழியில் இந்திரனும் நெற்றியில் சூரியனும் வாழ்கிறார்கள். அதன் முகம் பிரம்மன். இதயம் சிவன். பின்பக்கம் விஷ்ணு. அதன் யோனியில் திரு வாழ்கிறாள். அப்பசுவை உண்பவர்கள் இப்புடவியை உண்கிறார்கள்.
அத்தனை வைதிகரவைகளுக்கும் பொதுவாக வேள்விப்பசுவை பங்கிடுவதென்பது மேலும் மேலும் கடினமாகிக்கொண்டே சென்றது. குளம்புகள் முதல் கொம்புவரை பசுவைப்பங்கிடுவதன் கணக்கு தொல்குடிவைதிகரான சுருதருக்கே தெரிந்திருந்தது. வேள்விக்குடியினர் பெருகியபோது ஒன்று நூறாகப் பெருக அவிபங்கிடும் கணக்கு ஒன்றை நூற்றுப்பதினெட்டு வரிகளும் அறுநூறு சொற்களும் கொண்ட செய்யுளாக யாத்து தன் மைந்தனாகிய சிரௌதார்சனுக்கு கற்பித்தார். அந்தக்கணக்கு அவனிடமன்றி பிறரிடம் செல்லக்கூடாதென்று ஆணையிட்டார். அக்கணக்கை அறிந்தவன் வைதிகத்தலைமையை ஆள்கிறான், அதை இழந்தால் வைதிகம் தலைமையின்றி சிதறும் என்றார்.
அகவை முதிர்ந்து அவர் தேவபாகசிரௌதார்சர் என அழைக்கப்பட்டபின்னரும் வேள்விப்பசுவை பங்கிடும் கலையை பிறர் அறியவில்லை. வேதகுலங்கள் பெருகி ஒரு பசு பன்னிரண்டாயிரம் துண்டுகளாக பங்கிடப்பட்டபின்னரும் கூட அவரே தலைமை அவிபாகராக இருந்தார். வலக்கழுத்தின் பெருங்குழாய் வெட்டப்பட்டு பசுங்குருதி எரிகுளத்தில் அவியாக்கப்பட்டு விழி நெருப்பை நோக்கி ஒளிவிட்டுக்கிடக்கும் வெண்பசுவை நோக்கியதுமே அதை பன்னிரண்டாயிரம் துண்டுகளாக அவர் தன் நெஞ்சுக்குள் பார்த்துவிடுவார் என்றனர். ஒவ்வொரு வேதகுலத்திற்கும் உரிய தேவர்களும் துணைத்தேவர்களும் எவரென அவர் அறிந்திருந்தார். கபிலமரபு கால்களுக்கு உரியதாக இருந்தது. அவர்களுக்கு பசுவின் கண்ணிலும் உரிமை இருந்தது. கௌண்டின்ய மரபு பசுவின் கொம்புக்கு உரிமை கொண்டது. பசுவின் அகிடில் ஒரு துளியிலும் அதற்கு உரிமை இருந்தது. சாண்டில்ய மரபு பசுவின் கண்களையும் நெஞ்சையும் உரிமைகொண்டிருந்தது. பிருகு மரபுக்கு மட்டுமே உரியது எரிவடிவான நாக்கு. அதை பிருகுமரபில் இணைந்த பன்னிரு மரபுகள் பங்கிட்டுக்கொண்டன.
தேவபாகசிரௌதார்சர் தொட்டு பங்கிட்டால் ஒருதுளியும் குன்றாமல் கூடாமல் ஒவ்வொருவரும் பசுவைப்பெறுவர் என்று அனைவரும் நம்பினர். ஆனால் அவர் முதிர்ந்து விழிமங்கி சொல்தளர்ந்தபோதும் தந்தை தனக்களித்த அச்சொல்லை கைவிடவில்லை. காட்டெரி என வேதம் பாரதவர்ஷத்தில் படர்ந்தது. தண்டகாரண்யத்திலும் வேசரத்தின் அடர்காடுகளிலும் தெற்கே திருவிடத்திலும் தமிழ்நிலத்திலும் அது வேரூன்றியது. காந்தாரமும் காமரூபமும் வேதம் கொண்டன. அங்கெல்லாம் வேள்விக்குப்பின் அவிபாகம் கொள்வதில் பூசல்கள் எழுந்தன. எனவே தேவபாகரிடம் இருந்து பசுவைப்பங்கிடும் செய்யுளைக் கற்க பன்னிரு மாணவர்களை வைதிகரவை தேர்ந்தெடுத்து அனுப்பியது. அவர்கள் தேவபாகரிடம் மாணாக்கர்களாகச் சேர்ந்து பன்னிரு ஆண்டுகாலம் பயின்றனர். ஆனால் ஒரு சொல்லையேனும் அவர்களுக்குச் சொல்ல தேவபாகர் உளம் கனியவில்லை.
தேவபாகர் அகவை முதிர்ந்து வருவதை வைதிகரவை அறிந்து அஞ்சியது. அவர் அச்செய்யுளை மறப்பாரென்றால் பின்னர் வைதிகர்களை ஒருங்கிணைக்க முடியாமலாகும், தூயகாடுகளில் வேதம் எழாமலாகும் என்று அஞ்சினர். அந்நிலையில் ஒருநாள் முதுவைதிகரான பிரஹஸ்பதி தண்டகக் காட்டுக்குள் செல்கையில் மலைச்சிறுவன் ஒருவன் புதருக்குள் ஓசையின்றி ஒளிந்திருக்கும் பூனையை அம்பெய்து வெல்வதை கண்டார். பூனை தெரியாமல் கேளாமல் எவ்வண்ணம் அதை அவன் செய்தான் என்று கேட்டார். அதன் மூச்சிலாடும் இலைகளைக்கொண்டு அதன் இடத்தை அறிந்ததாக அவன் சொன்னான். அவன் காட்டின்சரிவில் கன்று மேய்த்த மலைமகள் ஒருத்திக்கு பெருவைதிகரான பத்ருவில் பிறந்தவன் என அறிந்தார். அவனுக்கு கிரிஜன் என்று பெயரிட்டு தன்னுடன் அழைத்துக்கொண்டார். அவனுக்கு வேதம் அளித்து வைதிகனாக்கி தேவபாகரிடம் அனுப்பினார்.
முதியவரான தேவபாகர் தன் தந்தை சொன்ன நுண்மொழி மறவாமலிருப்பதற்காக ஒவ்வொரு நாளும் காட்டில் அசிக்னி ஆற்றின் விரிந்த மணற்கரையில் தன்னந்தனியாக அமர்ந்து ஓசையின்றி அச்செய்யுளை ஏழு முறை சொல்லிக்கொள்வது வழக்கம். அதைக் கேட்கும் தொலைவில் அவர் எவரையும் நிற்கவைப்பதில்லை. தன் இதழசைவை எவரும் காணலாகாதென நீர்வெளி நோக்கி திரும்பி அமர்ந்திருப்பார். அவருக்குப்பின்னால் புதருக்குள் அமர்ந்திருந்த கிரிஜன் ஒரு மென்பஞ்சுத்துகளை காற்றில் விட்டு அது அவர் முன் வாயருகே பறக்கச்செய்தான். அவரது உதட்டசைவில் மென்பஞ்சுப்பிசிறு கொண்ட அசைவைக் கண்டு அச்சொற்களை உய்த்தறிந்தான். நுண்மொழியைக் கற்ற மறுநாளே ஆசிரியரின் அடிபட்ட மண்ணைத் தொட்டு நெற்றியில் இட்டபின் திரும்பி தண்டகாரண்யம் சென்றான்.
தானில்லாமல் பெருவேள்விகள் நிகழ்வதையும் பிழையில்லாமல் வேள்விப்பசு பங்கிடப்படுவதையும் அறிந்த தேவபாகர் சினம்கொண்டு சடைமுடியை அள்ளிச்சுழற்றிக் கட்டி கிளம்பி தண்டகத்திற்கு சென்றார். அங்கே அவர் சென்றுசேரும்போது வேள்விமுடிந்து அவிபாகம் நிகழ்ந்துகொண்டிருந்தது. தன் இளம் கைகளால் கிரிஜன் பசுவை குளம்பில் கூரிய கத்தியால் தொட்டு ஓவியத்தூரிகை எனச் சுழற்றி நெஞ்சு வளைவுக்குக் கொண்டு சென்று கழுத்தை வளைத்து வயிற்றை வகுந்து அகிடைப் பகுந்து யோனியைச் சுற்றி வால் நோக்கி சென்று வளைத்து இணைத்து மென்மலரிதழைப் பிரிப்பதைப்போல வெண்தோலை அகற்றி செவ்வூன் அடுக்குகளை இனிய நூலின் ஏடுகளைப் புரட்டுவதுபோல மறித்து உள்ளே அப்போதும் அதிர்ந்துகொண்டிருந்த இதயமுகிழை கையில் எடுப்பதைக் கண்டார். தீச்சொல்லிட கையில் எடுத்த நீர் ஒழுகி மறைய நோக்கி நின்றார். துளிசிந்தாமல் பசுவைப் பங்கிட்டு விழிதூக்கிய கிரிஜனைக் கண்டு கனிந்து புன்னகைத்து “ஓ கிரிஜனே, உன்னால் அனைத்தும் பங்கிடப்படட்டும். சிறந்த பங்குகளால் வாழ்கிறது அன்பு. அன்பில் தழைப்பது வேதச்சொல். ஆம், அவ்வண்ணமே ஆகுக!” என வாழ்த்தினார்.
இப்படி பட்ட மாட்டுகறியினை உண்பது இந்து மதத்திற்கு ஒவ்வாத செயல் என்று ஒரு சாராரும். இதனை கிண்டலடித்து எதிர்பிரச்சாரம் செய்ய மாட்டுகறி உண்ணும் போராட்டம் செய்யும் பகுத்தறிவு வாதிகளையும் என்னவென சொல்ல.
இதற்கு அடுத்த இடத்தினை பிடிப்பது பன்றி. எனது இளம்பிராயத்தில் கழிவறையற்ற நாகரீத்தில் வளர்ந்தவன் என்ற முறையில் பன்றிகளின் அரும்பெரும் சேவைகளை நன்கறிந்த காரணத்தால் அவைகளை பற்றி நினைத்தாலே முகச்சுழிப்பு வருவதை தவிர்க்க இயலவில்லை. இத்தனைக்கும் வெண்பன்றிகள் நவீன முறையில் பண்ணைகளில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வளர்க்க பட்டு வந்தாலும் ஆழ்மன முன்முடிவுகளை பெரும்பாலும் அகற்ற முடிவதில்லை. ஆனாலும் நிறைய பேர் உடலுக்கு குளிர்ச்சி என்று சொல்லி விரும்பி உண்கிறார்கள்.
கடற்கரை மற்றும் நீர்வளம் மிக்க பகுதிகளில் மீன் சாதரணமாக புழங்க கூடியது. என் போன்ற நீர்மறைவு பகுதியில் இருப்பவர்களுக்கு சாதரணமாக கிடைக்க கூடியதல்ல. அதாவது உள்ளூர் உற்பத்தி பொருள் அல்ல. சற்று விலையுயர்ந்த உணவே. எனவே யாரும் முக்கிய விருந்தினர் அல்லது விருந்து போன்ற சமயங்களில் காணப்படக்கூடிய சமாச்சாரம். மற்றபடி காடை, கெளதாரி, புறா போன்றவைகள் கிடைக்க கூடிய சமயத்தில் இருக்கும் ஓரிருவருக்கு மட்டுமே பங்கிட படகூடியது. நிறைய பேருக்கு என்று செய்து வைக்க இயலாது.
இங்கு பகிர்ந்துள்ள படம் அசைவம் உண்ணுவதை கிண்டல் செய்கிறது.
குறிப்பு : சைவவாதிகளுக்கு இப்படம் சற்றே அருவருப்பை உண்டாக்கலாம்.
இது போன்ற ஹாசிய பதிவுகளை அடிக்கடி எழுதுங்கள்